தலைப்பு செய்தி >> அயோத்தி வழக்கில் நாளை தீர்ப்பு ஊர்வலங்கள் நடத்த தடை
அயோத்தி வழக்கில் நாளை தீர்ப்பு ஊர்வலங்கள் நடத்த தடை
பதிவு செய்த நாள் 9/23/2010 12:23:23 AM
சென்னை : அயோத்தி நிலம் தொடர்பான வழக்கில் நாளை தீர்ப்பு வழங்கப்பட உள்ளதால் தமிழகத்தில் எல்லா மாவட்டங்களிலும் 'ரெட் அலார்ட்' கொடுக்கப்பட்டுள்ளது. ஊர்வலங்கள், பொதுக் கூட்டம், பேரணிகள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. உத்திரப்பிரதேச மா£நிலம் அயோத்தியில் பாபர் மசூதி இருத்த சர்ச்சைக்குரிய ‘அயோத்தி பூமி’ யாருக்கு சொந்தம் என்பது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில், அலகாபாத் ஐகோர்ட்டில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு நாளை தீர்ப்பு அளிக்கப்பட உள்ளது.தமிழகத்தில் கோவை, திருப்பூர், வேலூர், கன்னியாகுமரி, தஞ்சை, நாகை, திருச்சி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்கள் பதட்டமானவை என்று கண்டறியப்பட்டுள்ளன. தமிழ்நாடு சிறப்புக் காவல்படை, அதிரடிப்படை போலீசார் மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மாநிலம் முழுவதும் ரெட் அலார்ட் கொடுக்கப்பட்டுள்ளன. மாவட்டங்களில் வருவாய் துறை அதிகாரிகளுடன் இணைந்து அமைதிக் குழுக்கள் அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இதற்கிடையில், தமிழகத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தலைமைச் செயலாளர் மாலதி, நேற்று மாலை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்தக் கூட்டத்தில் உள்துறைச் செயலாளர் ஞானதேசிகன், பொதுத்துறைச் செயலாளர் கருத்தையாபாண்டியன், டிஜிபி லத்திகா சரண், சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி ராதாகிருஷ்ணன், போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன், புறநகர் கமிஷனர் ஜாங்கிட் மற்றும் திருச்சி, மதுரை, நெல்லை, கோவை, சேலம் ஆகிய மாநகர போலீஸ் கமிஷனர்கள், மண்டல ஐஜிக்கள் கலந்து கொண்டனர்.
அப்போது தமிழகத்தில் எடுக்கப்பட வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகளுக்கு மாலதி உத்தரவுகளைப் பிறப்பித்தார். பின், போலீசார் எடுத்துள்ள நடவடிக்கைகளை டிஜிபி லத்திகா சரண் விளக்கினார். இந்தக் கூட்டத்துக்குப்பிறகு சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி ராதாகிருஷ்ணன் கூறியது: தமிழகத்தில் பதட்டமான பகுதிகள் கண்டறியப்பட்டு, போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பதட்டமான இடங்களில் அதிரடிப்படை போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ரோந்துப் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. பஸ், ரயில் நிலையங்கள், மார்க்கெட், மக்கள் கூடும் இடங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். போலீசாரின் விடுமுறைகள் ரத்து செய்யப்பட்டு பணிக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
அதிகாரிகள் தலைமையிடத்தில் இருக்க உத்தரவிடப்பட்டுள்ளது. சந்தேகத்துக்குரியவர்களின் நடமாட்டம் கண்காணிக்கப்பட உத்தரவிடப்பட்டுள்ளது. உளவுப் பிரிவு போலீசார் முடுக்கி விடப்பட்டுள்ளனர். இதுவரை மத்திய அரசில் இருந்து எச்சரிக்கைத் தகவல்கள் வரவில்லை. ஆனால் மாநில உளவுப் பிரிவு போலீசார் எங்களுக்கு சில தகவல்களை கொடுத்துள்ளனர். அதை வைத்து பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தீர்ப்பு வெளியாகும் நாளில் ஊர்வலம், பொதுக் கூட்டம், பேரணி நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. அமைதியை நிலைநாட்ட அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப் பட்டுள்ளன. ரயில்வே பாதைகளில் ரோந்துப் பணிகள் மேற்கொள்ளப்படும். தமிழகம் அமைதியான மாநிலம். பொதுமக்கள் முழு அமைதி காக்க வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை போலீசார் எடுத்துள்ளனர். இவ்வாறு கூடுதல் டிஜிபி ராதாகிருஷ்ணன் கூறினார்.

{ 0 comments... read them below or add one }
Post a Comment