Login with Facebook

ஒமர் அப்துல்லாவுக்கு சோனியா ஆதரவா?

Posted by tamil on Tuesday, September 14, 2010

காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லாவை மாற்றம் செய்ய வேண்டுமென, பல்வேறு தரப்பிலும் கோரிக்கைகள் எழுந்த வண்ணம் இருக்கின்றன. இருப்பினும், எக்காரணம் கொண்டும் அவரை மாற்றக் கூடாது என, சோனியாவும் ராகுலும் விரும்புகின்றனர். இதை திசை திருப்புவதற்காகவே, காஷ்மீரில் ராணுவத்துக்கே உரிய விசேஷ அந்தஸ்துடன் கூடிய ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வர உள்துறை அமைச்சகமும், பாதுகாப்பு அமைச்சகமும் மாறி மாறி பரிசீலனை செய்வதாக தெரியவந்துள்ளது.

கடந்த 1958ம் ஆண்டில் வடகிழக்கு மாநிலங்களில் ஏற்பட்ட கலவரங்களை அடக்க, ராணுவத்துக்காக ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம் மத்திய அரசால் கொண்டு வரப்பட்டது. பின்னர், இந்த சட்டம், 1990களில் இருந்து காஷ்மீரிலும் அமல்படுத்தப்பட்டது. காஷ்மீரில் பயங்கரவாதம் தலைதூக்குவதை அடக்குவதற்காக, இச்சட்டம் கொண்டு வரப்படுவதாக அப்போது கூறப்பட்டது. இந்த சட்டத்தால், காஷ்மீர் மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவதாக கருத துவங்கினர். அதன் விளைவாக, இந்த சட்டத்தை ரத்து செய்ய வேண்டுமென பல்வேறு தரப்பிலும் கோரிக்கைகள் எழுந்தன. இதனால், இந்த சட்டத்தில் சில திருத்தங்களை கொண்டு வர வேண்டுமென மத்திய உள்துறை அமைச்சகம் விரும்புகிறது. ஆனால், அந்த திருத்தங்களுக்கு பாதுகாப்பு அமைச்சம் எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த சூழ்நிலையில், டில்லியில் பாதுகாப்பு விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவையின் கூட்டம் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில் மிக முக்கியமாக இந்த சட்டம் குறித்து தான் பேசப்பட்டது. இந்த சட்டத்தில் திருத்தங்களை கொண்டு வர வேண்டுமென்ற உள்துறை அமைச்சகத்தின் கருத்துக்கு பாதுகாப்பு அமைச்சகம் பலத்த எதிர்ப்பு தெரிவித்ததாக தெரிகிறது. காஷ்மீரில் ராணுவம் இருப்பது பிடிக்கவில்லை எனில், முழுவதுமாக அங்கிருந்து வாபஸ் பெற தயார். ஆனால் இந்த சட்டம் இல்லாமல், காஷ்மீரில் ராணுவம் இருக்க தயாரில்லை என்று பாதுகாப்பு அமைச்சம் தெளிவாக கூறிவிட்டதாக தெரிகிறது. காஷ்மீரில் ஜம்மு, சாம்பா, ஸ்ரீநகர், கந்தர்பால் ஆகிய மாவட்டங்களில் பயங்கரவாதம் என்பது துளியும் இல்லை. இந்த மாவட்டங்களில் தான் ஆயுதப்படை சிறப்பு சட்டத்தை ரத்து செய்வது குறித்து அரசு பரிசீலனை செய்து வருகிறது. தவிர, குப்புவாரா, தோடா, அனந்த்நாக், பூஞ்ச், ரஜவுரி ஆகிய மாவட்டங்களில் தான் பயங்கரவாதம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மக்கள் கோபம்: காஷ்மீர் மாநில முதல்வரான ஒமர் அப்துல்லா மீது மக்கள் நம்பிக்கை இழந்தும், அவர் மீது கோபமும் கொண்டு வருவதாக தெரிகிறது. அவரை மாற்ற வேண்டுமென பல தரப்பிலும் கோரிக்கைகள் எழுந்துள்ளன. காஷ்மீரில் தற்போது உருவாகிவரும் சூழ்நிலைக்கு முக்கிய காரணமே, ஒமர் அப்துல்லா மீது மக்கள் கொண்டுள்ள அதிருப்தி தான் என்று கூறப்படுகிறது.

இது குறித்து தகவலறிந்த வட்டாரங்கள் கூறியதாவது: ஷேக் அப்துல்லாவை பொறுத்தவரை அவர் டில்லிக்கு எப்போதுமே அடிபணிந்து போகாதவர். ஆனால், அவரது வாரிசுகளான பரூக்கும் சரி, ஒமரும் சரி, இருவருமே டில்லியின் பேச்சை தட்டாமல் நடந்து வருகின்றனர். பரூக் அப்துல்லாவின் மகளைத்தான் காங்கிரஸ் எம்.பி.,யான சச்சின் பைலட் மணந்துள்ளார். இந்த உறவை வைத்துக் கொண்டு, மன்மோகன் சிங் அரசு மீதான நம்பிக்கை ஓட்டெடுப்பு நடந்தபோது தேசிய மாநாட்டு கட்சியின் ஐந்து எம்.பி.,க்களும் காங்கிரசை ஆதரித்தனர். அப்போதே ஒமர் அப்துல்லாவுக்கு முதல்வர் பதவி வாய்ப்பு உறுதி செய்யப்பட்டது. இப்போது, நிலைமை மிகவும் மோசமாக இருந்தபோதிலும் சோனியா, ராகுலின் ஆதரவு ஒமருக்கு உள்ளது. ஒமரை, முதல்வர் பதவியிலிருந்து மாற்றம் செய்யக் கூடாது என, இருவரும் விரும்புகின்றனர்.

இந்த விஷயத்தை திசை திருப்பவே, இப்போது ஆயுதப்படை சிறப்பு சட்டத்தை திருத்துவதா வேண்டாமா என்ற பிரச்னை, அரசின் முன் வைக்கப்பட்டுள்ளது. எப்போதெல்லாம் தேசிய மாநாட்டு கட்சியும் காங்கிரசும் ஒரே கூட்டணியில் இருந்தனவோ, அப்போதெல்லாம் பிரச்னைகள் வெடித்துள்ளன. இதே சச்சின் பைலட்டின் தந்தையான ராஜேஷ் பைலட் தான், ராஜிவ் - பரூக் அப்துல்லா ஒப்பந்தம் ஏற்படுத்த 1987ல் காரணமாக இருந்தார்.அப்போதும் கலவரம் வெடித்தது. இப்போதும் அதே நிலைமை தான். ஆனால், ஒமர் அப்துல்லாவை மாற்றுவதை விட்டுவிட்டு, ஆயுதப்படை சிறப்பு சட்டத்தை திருத்தலாமா, வேண்டமா என்று ஆராய்ச்சி நடக்கிறது. இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

{ 0 comments... read them below or add one }

Post a Comment