Login with Facebook

news

Posted by tamil on Thursday, September 23, 2010

நம்பிக்கை ரொம்ப உயரம்
Thursday, September 23, 2010 7:27 PM

காபூல்: வறுமை, வன்முறை, அமெரிக்க முற்றுகை பற்றியே அடிக்கடி செய்திகள் வரும் ஆப்கானிஸ்தான் நாடு. இதன் மேற்கு பகுதியில் இருக்கும் ஹெராத் நகரில் ‘தவுசண்ட் அண்ட் ஒன் நைட்ஸ்’ (ஆயிரத்தோரு இரவுகள்) என்ற பெயரில் ஒரு ஓட்டல். சாப்பிட வருபவர்கள் ‘‘அப்துல் ஜாபர் முகமது.. பர்ஹான்.. அப்துல் ரகுமான்..’’ என்ற 3 பேரையும் மாற்றி மாற்றி அழைத்துக் கொண்டே இருக்கின்றனர். அவர்களும் ஓடிஓடி வந்து பரிமாறுகின்றனர். புதிய கஸ்டமர்களையும் அன்பொழுக வரவேற்கின்றனர். ‘ஏன் இவ்வளவு நேரம்’ என்று கடிந்துகொள்பவர்களையும் அன்பாக பேசி சமாளிக்கின்றனர்.

3 பேருமே சராசரி உயரத்தை விட கம்மிதான். ‘‘இவங்களுக்கு வெளியில யார் வேலை கொடுப்பா? அதான், என் ஓட்டல்லயே வேலை கொடுத்திருக்கேன்’’ என்று பெருமையுடன் சொல்கிறார் ஓட்டல் இயக்குனர் பரஸ் ஐனக். ‘‘தாராளமா சம்பாதிக்கிறோம். குடும்பத்தை காப்பாத்துறோம். மனசுல உறுதியும் நம்பிக்கையும் அதிகமா இருக்கு. வேறென்ன வேணும்?’’ என்கின்றனர் மூவரும்.
32 ஆண்டுகளுக்கு பிறகு யமுனையில் மிதமிஞ்சிய வெள்ளம்
Thursday, September 23, 2010 6:29 PM

புதுடெல்லி: யமுனையில் வரலாறு காணாத அளவில் 32 ஆண்டுகளுக்குப் பிறகு மிதமிஞ்சிய அளவில் வெள்ளம் பெருக்கெடுத்து பாய்கிறது. அரியானா மாநிலத்தில் உள்ள ஹதினி குந்த் அணை நிரம்பியதால் அது திறப்பட்டது. கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவு, வினாடிக்கு 7.2 லட்சம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டதால் யமுனை தண்ணீர் அளவு சலேரென உயர்ந்தது. அபாய அளவை தாண்டி 2 மீட்டர் உயரத்துக்கு வெள்ளம் பெருக்கெடுத்திருப்பதால் தலைநகர் டெல்லி வெள்ள அபாயத்தில் உள்ளது. தாழ்வான பகுதிகளில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர். 22 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. 65 ரயில்கள் மாற்று பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளன.
முதல்வர்- கே.வி.தங்கபாலு சந்திப்பு
Thursday, September 23, 2010 6:21 PM

 சென்னை: இன்று சென்னையில் முதல்வர் கருணாநிதியை தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.வி.தங்கபாலு சந்தித்து பேசினார். தமிழ்நாடு அரசியல் நிலவரம் குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்றது. மேலும் திமுக மற்றும் காங்கிரஸ் உறவு வலுவாக உள்ளது என்று பேச்சு வார்த்தைக்கு பின் தங்கபாலு தெரிவித்துள்ளார்.
ஊழல் புகாரில் தண்டிக்கப்பட்ட அரசு ஊழியர்களை டிஸ்மிஸ் செய்யலாம்
Thursday, September 23, 2010 6:09 PM

சென்னை: ஊழல் புகாரில் தண்டிக்கப்பட்ட அரசு ஊழியர்களை டிஸ்மிஸ் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. டிஸ்மிஸ் ஆன 3 அரசு ஊழியர்கள் தொடர்ந்த வழக்கில் உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தீர்ப்பு வழங்கியுள்ளது. மேலும் தண்டனை பெற்ற ஊழியர்களை டிஸ்மிஸ் செய்யும் முன் விளக்கம் கேட்க தேவையில்லை என்றும் உத்தரவிட்டுள்ளது.
வேலூரில் வெடிமருந்து ஆலை தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்
Thursday, September 23, 2010 5:50 PM

வேலூர்: வேலூர் காட்பாடியில் தமிழ்நாடு வெடிமருந்து ஆலை தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். நிலுவையில் உள்ள ஊதிய உயர்வு பற்றிய ஒப்பந்தத்தை அமல்படுத்த வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர். காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஊழியர்கள் 435 பேர் பங்கேற்றனர்.
பாகிஸ்தான் கோரிக்கைக்கு எஸ்.எம்.கிருஷ்ணா கண்டனம்
Thursday, September 23, 2010 5:30 PM

புதுடெல்லி: காஷ்மீர் பிரச்னை இந்தியாவின் உள்நாட்டு விவகாரம், இதில் பாகிஸ்தான் தலையிட வேண்டாம் என்று இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா தெரிவித்துள்ளார். நியூயார்க்கில் ஐ.நா., உச்சி மாநாட்டில் பங்கேற்க சென்றுள்ள எஸ்.எம்.கிருஷ்ணா கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் காஷ்மீர் பிரச்னையில் அமெரிக்கா தலையிட வேண்டும் என்று பாகிஸ்தான் கோரக்கூடாது என்றும் எஸ்.எம்.கிருஷ்ணா தெரிவித்துள்ளார். காஷ்மீர் பிரச்னையால் இந்தியா மீது பாகிஸ்தான் பழி போடக் கூடாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.  
என்ஜின் கோளாறால் அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்
Thursday, September 23, 2010 5:10 PM

புதுடெல்லி : டெல்லியிலிருந்து பெங்களூருக்கு 150 பயணிகளுடன் சென்ற ஜெட்லைட் விமானம் என்ஜின் கோளாறு காரணமாக புறப்பட்ட சில நிமிடங்களிகலேயே அவசரமாக தரையிறக்கப்பட்டது. விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே விமானத்தின் ஒரு என்ஜினில் கோளாறு ஏற்பட்டிருப்பதை ‌பைலட்டுகள் கண்டுபிடித்தனர். இதனையடுத்து விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது. இதனால் பயணிகள் பத்திரமாக உள்ளன.
தண்டேவடாவில் பயணிகள் ரயில் தடம் புரண்டு விபத்து
Thursday, September 23, 2010 4:24 PM

மே.வங்கம்: சட்டீஸ்கர் மாநிலம் தண்டேவடாவில் பயணிகள் ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. கிரந்துகல்-விசாகப்பட்டிணம் இடையே செல்லும் பயணிகள் ரயிலின் என்ஜின் மற்றும் பெட்டிகள் தடம் புரண்டது. இதில் ரயிலில் பயணம் செய்த பயணிகளுக்கு எவ்வித ஆபத்தும் ஏற்படவில்லை. மேலும் ரயில் தடம் புரண்டதற்கு மாவோயிஸ்டுகளின் சதியா என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
அயோத்தி தீர்ப்பு: பல்க் எஸ்எம்எஸ் அனுப்ப தடை
Thursday, September 23, 2010 4:17 PM

புதுடெல்லி: நாளை வெளியாகவிருக்கும் அயோத்தி தீர்ப்பை முன்னிட்டு 3 நாட்களுக்கு பல்க் எஸ்.எம்.எஸ், எம்.எம்.எஸ் அனுப்ப தடை விதிக்கப்பட்டுள்ளது. தவறான வதந்திகள் ஏற்படுவதைத் தடுப்பதற்காக மத்திய அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. மேலும் சனிக்கிழமை வரை இதை பின்பற்றவும் மத்திய அரசு அறிவித்துள்ளது.
பாலாற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு
Thursday, September 23, 2010 3:54 PM

தமிழக-கர்நாடக எல்லையில் உள்ள பாலாற்றில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேட்டூரில் கால்நடைகள், பரிசல்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. கால்நடைகளின் அலறல் கேட்டு கரையோரம் படுத்திருந்த மீனவர்கள் உயிர் தப்பினர். மாதேஸ்வரன் மலை வனப்பகுதியில் பெய்த மழையே பாலாற்று வெள்ளத்திற்கு காரணம்.
காமன்வெல்த்: கனடா வீரர்கள் விலகல்
Thursday, September 23, 2010 3:53 PM

புதுடெல்லி : காமன்வெல்த் போட்டிக்கான ஏற்பாடுகள் அதிருப்தி அளிப்பதால் பல்வேறு நாட்டு வீரர்கள் போட்டியிலிருந்து விலகி வருகின்றனர். ஆஸ்திரேலியா, இங்கிலாந்து வீரர்கள் 4 பேர் விலகியதைத் தொடர்ந்து கனடாவைச் சேர்ந்த வில் வீரர்கள் 2 பேர் போட்டியிலிருந்து விலகியுள்ளனர். சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு காரணங்களுக்காக போட்டியிலிருந்து விலகுவதாக வீரர்கள் தெரிவித்துள்ளனர்.

பெங்களூர் சிறையில் மதானியை சந்திக்க மனைவிக்கு அனுமதி
Thursday, September 23, 2010 3:20 PM

திருவனந்தபுரம்: பெங்களூர் சிறையில் இருக்கும் மதானியை சந்திக்க அவரது மனைவி சூபியா மதானிக்கு கொச்சி என்ஐஏ நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. பஸ் எரிப்பு வழக்கில் 10வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள மதானியின் மனைவி சூபியா மதானி நிபந்தனை ஜாமீனில் உள்ளார். எர்ணாகுளம் மாவட்டத்தை விட்டு வெளியே செல்லக்கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கிடையே பெங்களூர் சிறையில் அடைக்கபட்டுள்ள மதானியை சந்திக்க அனுமதி வழங்க கோரி சூபியா மதானி, என்ஐஏ நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது என்ஐஏ சார்பில் ஆஜரான வக்கீல் சூபியா மதானியில் ஜாமீனை தளர்த்த கூடாது என வாதிட்டார். அதனை நிராகரித்த நீதிமன்றம், பெங்களூர் சென்று மதானியை சந்திக்க சூபியா மதானிக்கு 2 வாரம் ஜாமின் மனுவை தளர்த்த உத்தரவிட்டது. மேலும் பெங்களூர் செல்வது குறித்து என்ஐஏ அதிகாரிகளுக்கு முன்கூட்டியே தெரிவித்த பின்னர் தான் செல்ல வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
பிளஸ் 2 தனித்தேர்வு 6,500 பேர் எழுதினர்
Thursday, September 23, 2010 3:13 PM

சென்னை: பிளஸ் 2 தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்களுக்கான தனித் தேர்வு நேற்று தொடங்கியது. பிளஸ் 2 பொதுத் தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்களுக்காக, தனித் தேர்வுகள் நேற்று தொடங்கின. தமிழகம் முழுவதும் 38,500 பேர் எழுதுகின்றனர். சென்னையில் என்பிடிஎம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, விசிஎம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, கேடிஎஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட 11 பள்ளிகளில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. இவற்றில் சுமார் 6,500 மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர். அக்டோபர் 4ம் தேதி தேர்வுகள் முடிகின்றன. இதுதவிர, மெட்ரிக்குலேஷன் மாணவர்களுக்கான தனித்தேர்வுகளும் நேற்று தொடங்கின. இந்த தேர்வில் 3,643 பேர் எழுதுகின்றனர். இந்த தேர்வுகளும் அக்டோபர் 4ம் தேதி முடிகின்றன.

சாம்பியன்ஸ் லீக் டி20 : அரை இறுதியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ், வாரியர்ஸ் அணி தெற்கு ஆஸ்திரேலியா அணியும் மோதுகின்றன
Thursday, September 23, 2010 5:58 AM

போர்ட் எலிசபத் : சாம்பியன்ஸ் லீக் டி20 தொடரின் ஏ பிரிவில் நடந்த லீக் ஆட்டத்தில், வாரியர்ஸ் அணியை 10 ரன் வித்தியாசத்தில் தோற்கடித்து அரை இறுதி போட்டிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தகுதி பெற்றது. தென் ஆப்பிரிகாவில் நடந்து வரும் சாம்பியன்ஸ் லீக் டி20 தொடரின் ஏ பிரிவு போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், தென் ஆப்பிரிக்காவின் வாரியர்ஸ் அணியும் மோதின.
 ‘டாஸ்’ ஜெயித்த சென்னை சூப்பர் கிங்ஸ் முதலில் பேட் செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக ஹசேயும் முரளி விஜய்யும் களம் இறங்கினார்கள்.
ஹசே 50, விஜய் 35, ரெய்னா 6, பத்ரிநாத் 2, அனிருத் 7, கெம்ப் 0 ரன் எடுத்து வெளியேற தோனி 31 ரன்னுடனும் அஸ்வின் 1 ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர். சென்னை சூப்பர் கிங்ஸ் 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 136 ரன் எடுத்தது. அடுத்து 137 ரன் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் களம் இறங்கிய வாரியர்ஸ் அணி 8 விக்கெட் இழப்புக்கு 126 ரன் எடுத்து தோற்றது. 10 ரன் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அபாரமாக வெற்றி பெற்று அரை இறுதிக்குள் நுழைந்தது.
அரை இறுதியில் :
முதலாவது அரை இறுதி போட்டி வெள்ளிக் கிழமை நடக்கிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் வாரியர்ஸ் அணி தெற்கு ஆஸ்திரேலியா அணியும் மோதுகின்றன.
சென்னை பல்கலை எம்.பி.ஏ, டிப்ளமோ தேர்வு முடிவு நாளை வெளியீடு
Wednesday, September 22, 2010 11:19 PM

சென்னை: சென்னை பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி நிறுவனம் நடத்தும் எம்.பி.ஏ, சி.எல்.ஐ.எஸ், பி.எல்.ஐ.எஸ், எம்.எல்.ஐ.எஸ் மற்றும் டிப்ளமோ, சான்றிதழ் படிப்புக்கான தேர்வு முடிவுகள் நாளை வெளியிடப்படுகிறது. பல்கலைக்கழக இணைய தளம்
www.ideunom.ac.in உட்பட 9 இணைய தளங்கள் மூலம் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மதிப்பெண் பட்டியல்கள் தபால் மூலம் அனுப்பி வைக்கப்படும். கிடைக்காதவர்கள் தபால் அலுவலகத்தில் ஆதாரங்களை காட்டி பெற்றுக் கொள்ளலாம். டிப்ளமோ, சான்றிதழ் படிப்புகள் தவிர மற்ற தேர்வு எழுதியவர்கள் மறு மதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்கலாம். ஒவ்வொரு தாளுக்கும் Ï. 750 டிடியாக செலுத்த வேண்டும். அக்டோபர் 8ம் தேதிக்குள் பூர்த்தி செய்த விண்ணப்பங்கள் வந்து சேரவேண்டும்.
ம.பி. ரயில் விபத்து: பலி எண்ணிக்கை 24 ஆக உயர்வு
Wednesday, September 22, 2010 11:17 PM

ஷிவ்புரி: மத்தியப் பிரதேசத்தில் நேற்று முன்தினம் நடந்த ரயில் விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 24 ஆக உயர்ந்துள்ளது. மத்தியப் பிரதேசம் ஷிவபுரி அருகே பதர்வாஸ் ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த எக்ஸ்பிரஸ் ரயில் மீது அதே தண்டவாளத்தில் வந்த சரக்கு ரயில் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 23 பேர் பலியாயினர். 52 பேர் காயமடைந்தனர். அவர்கள் ஷிவபுரி மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர். இவர்களில் பலத்த காயமடைந்த ஒருவர் சிகிச்சை பலனின்றி நேற்று காலை இறந்தார். இதைத் தொடர்ந்து விபத்தில் பலியானோரின் எண்ணிக்கை 24 ஆக உயர்ந்துள்ளது. இதனிடையே, விபத்து குறித்து ரயில்வே அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்து நடந்த இடத்தில் மீட்பு பணிகள் முடிந்து ரயில் போக்குவரத்து வழக்கம் போல தொடங்கியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

காமன்வெல்த்: மேலும் ஒரு கூரை இடிந்தது
Wednesday, September 22, 2010 11:10 PM

புதுடெல்லி: காமன்வெல்த் போட்டிகளின் துவக்க விழா மற்றும் நிறைவு விழா நடைபெறவுள்ள ஜவகர்லால் நேரு விளையாட்டு மைதானத்தின் நுழைவு வாயிலில் உள்ள நடைபாதை பாலம் இடிந்து விழுந்தது. இதில் கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டிருந்த 19 தொழிலாளர்கள் படுகாயமடைந்தனர். இதேபோல் இன்று பளு தூக்கும் அரங்க மேற்கூரை இடிந்து விழுந்தது. இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதனையடுத்து மேலும் விளையாட்டுக்குழு அமைப்பினருக்கு பெரும் நேருக்கடி ஏற்பட்டுள்ளது.

திருமணத்துக்கு மறுத்த இன்ஜி. மாணவி கழுத்தறுப்பு
Wednesday, September 22, 2010 11:01 PM

விசாகப்பட்டினம்: ஆந்திர மாநிலம் ஐதராபாத்தில் உள்ள தனியார் கம்பெனியில் சாப்ட்வேர் இன்ஜினியராக வேலை பார்ப்பவர் பிரவீன் (24). கல்லூரியில் படித்தபோது ஜூனியர் மாணவி ஸ்ரீஷாவை காதலித்தார். தன்னை திருமணம் செய்து கொள்ள வலியுறுத்தி, 3 ஆண்டுகளாக ஸ்ரீஷா பின்னாடியே சுற்றி வந்தார். அவரை ஸ்ரீஷா கண்டுகொள்ளவில்லை. இதனால் ஸ்ரீஷா மீது பிரவீனுக்கு கடும் ஆத்திரம் ஏற்பட்டது.

இந்நிலையில் விசாகப்பட்டினத்தில் உள்ள ஒரு இன்டர்நெட் சென்டரில் ஸ்ரீஷாவை சந்தித்தார் பிரவீன். அப்போது, ‘என் காதலை நீ ஏற்றுக் கொள்ளவில்லை. எனக்கு கிடைக்காத நீ, வேறு யாருக்கும் கிடைக்கக் கூடாது’ என்று கத்தியபடி, மறைத்து வைத்திருந்த பிளேடால் ஸ்ரீஷாவின் கழுத்தை அறுத்தார்.

அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடிவந்து அவரை ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பிரவீன் எஸ்கேப் ஆகிவிட்டார். ஆந்திர மாநிலத்தில் திவ்யா என்ற இன்ஜினியரிங் மாணவி வாலிபரால் அடித்துக் கொல்லப்பட்ட பரபரப்பு அடங்குவதற்குள் இன்னொரு மாணவி மீது தாக்குதல் நடந்துள்ளது.

பிசிசிஐ விசாரணைக்கு தடை கேட்டு சுப்ரீம் கோர்ட்டில் லலித் மோடி மனு
Wednesday, September 22, 2010 11:01 PM

புதுடெல்லி: இந்தியன் பிரீமியர் லீக் அமைப்பின் தலைவராக இருந்த லலித் மோடிக்கு எதிராக ஐபிஎல் போட்டிகள் ஏலம் விட்டதில் ஊழல், ஐபிஎல் போட்டியில் மறைமுக உரிமை என பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுப்பப்பட்டன. இதையடுத்து ஐபிஎல் தலைவர் பதவியிலிருந்து மோடி நீக்கப்பட்டார். அவர் மீதான புகார் குறித்து விசாரணை நடத்த ஐபிஎல் இடைக்கால தலைவர் சிரயு அமின், அருண்ஜெட்லி மற்றும் ஜோதிர் ஆதித்யா சிந்தியா ஆகியோர் அடங்கிய விசாரணைக் கமிட்டியை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அமைத்தது.

இதை எதிர்த்து மும்பை ஐகோர்ட்டில் லலித்மோடி வழக்கு தொடர்ந்தார். இது தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து சுப்ரீம் கோர்ட்டில் மோடி அப்பீல் செய்துள்ளார். தனது அப்பீல் மனுவில், தன் மீதான குற்றங்கள் குறித்து விசாரணை நடத்த சிறப்புக் கமிட்டி அமைக்க வேண்டும் என தீர்மானம் போட்டவர்களே விசாரணை கமிட்டியில் இடம் பெற்றிருப்பதாகவும், அவர்களிடமிருந்து தனக்கு நியாயம் கிடைக்காது என மோடி தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சக புதிய செயலாளர் உஷா மாத்தூர்
Wednesday, September 22, 2010 10:50 PM

புதுடெல்லி: நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்ச கத்தின் செயலாளராக அனில் குமார் இருந்தார். அவர் ஓய்வு பெற்றதை அடுத்து அந்த பதவிக்கு உஷா மாத்தூர் நியமிக்கப்பட்டுள்ளார். மத்திய அமைச்சரவை நியமனங் கள் குழு இதற்கான ஒப்புதலை அளித்துள்ளது. நுகர்வோர் விவகாரம், உணவு மற்றும் பொது விநியோகத் துறை அமைச்சகத்தின் உணவு மற்றும் பொது வழங்கல் துறை கூடுதல் செயலாளராக கடந்த ஜூலை 28&ம் தேதியில் இருந்து பதவி உயர்வு அடிப்படையில் நிரஞ்சன் சன்யாலை நியமனம் செய்யவும் அமைச்சரவையின் நியமனங்கள் குழு ஒப்புதல் வழங்கியுள்ளது.

{ 0 comments... read them below or add one }

Post a Comment