மத்திய அமைச்சரவையிலிருந்து வெளியேறுவதற்கு தொகுதிகள் அல்ல காரணம்!
புது தில்லி, மார்ச் 6: ""திராவிட முன்னேற்றக் கழகம் மத்திய அமைச்சரவையிலிருந்து வெளியேறுவதற்கு தொகுதிகள் ஒதுக்கீடுப் பிரச்னை காரணமல்ல'' என்று கருத்துத் தெரிவித்தார் அகில இந்தியக் காங்கிரஸ் கமிட்டியின் பொதுச் செயலாளர்களில் ஒருவரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான திக் விஜய் சிங். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடுவது என்கிற முடிவில் தவறு காண முடியாது என்றும் அவர் தெரிவித்தார். ÷மத்தியில் ஆட்சியில் இருக்கும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கான தனது ஆதரவை தி.மு.க. சனிக்கிழமை திரும்பப் பெற்றது. பிரதமரை திங்கள்கிழமை சந்தித்து அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் 6 தி.மு.க. அமைச்சர்களும் தங்களது ராஜிநாமாவைக் கொடுக்க இருக்கின்றனர். ÷இதுவரையில், தி.மு.க.விடம் சமாதானம் பேசவோ, தொகுதி உடன்பாடு பற்றிப் பேசவோ, தி.மு.க.வின் முடிவை மறுபரிசீலனை செய்யச் சொல்லி வேண்டுகோள் விடுக்கவோ காங்கிரஸ் தரப்பிலிருந்து எந்தவித முயற்சியும் மேற்கொள்ளாதது, பரவலாகவே வியப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ÷அரசுக்கான ஆதரவைத் திரும்பப் பெறுவது என்கிற தி.மு.க.வின் முடிவுக்கு காங்கிரஸ் கட்சி அதிகம் இடங்கள் கேட்பதும், அவர்கள் விரும்பும் தொகுதிகள் ஒதுக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்ததும்தான் காரணம் என்கிற தி.மு.க.வின் குற்றச்சாட்டை தில்லி காங்கிரஸ் வட்டாரங்கள் மறுக்கின்றன. தி.மு.க. தலைவர் கருணாநிதி கூறுவதுபோல 60 இடங்களை காங்கிரஸýக்கு தி.மு.க. ஒதுக்குவதாகச் சொல்வதும் புதிய தகவல் என்று வியப்பை வெளிப்படுத்தினார் கட்சி மேலிடத்துக்கு நெருக்கமான ஒருவர். ÷உச்ச நீதிமன்றத்தின் நேரடிக் கண்காணிப்பில் மத்தியப் புலனாய்வுத் துறையின் "ஸ்பெக்ட்ரம்' அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடுகள் பற்றிய விசாரணை நடத்தப்பட்டு வருவதால், பிரதமரது அலுவலகமோ, உள்துறை அமைச்சரகமோ தலையிட முடியாத நிலைமை. தி.மு.க. தலைமை தனது குடும்பத்தினரை மத்தியப் புலனாய்வுத் துறை விசாரிக்கக் கூடாது என்கிற கோரிக்கையைப் பிரதமர் அலுவலகம் நிராகரித்து விட்டதாகத் தெரிகிறது. ÷கடந்த முறை முதல்வர் தில்லி சென்றபோது, காங்கிரஸ் தலைவி சோனியா காந்தியிடம் இதைப் பற்றிப் பேச முடியாத வகையில், ராகுல் காந்தி, அரசியல் ஆலோசகர் அகமது படேல் போன்றவர்கள் கூடவே இருந்தது, திட்டமிட்டே தி.மு.க. தலைமையை தர்மசங்கடத்தில் ஆழ்த்தும் முயற்சி என்று முதல்வர் கருணாநிதி கருதினார் என்று விவரம் அறிந்தவர்கள் கூறுகிறார்கள். ÷அடுத்த சில நாள்களில், மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழியை மட்டுமன்றி முதல்வரின் மனைவி தயாளு அம்மையாரையும் மத்திய புலனாய்வுத் துறை விசாரணைக்கு அழைக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டிருப்பதாகத் தெரிகிறது. ஏற்கெனவே ஆ. ராசாவின் கைது, கலைஞர் தொலைக்காட்சியில் சோதனை என்கிற பெயரில் அண்ணா அறிவாலயத்தில் சி.பி.ஐ. நுழைந்தது என்று கொதித்துப் போயிருக்கும் தி.மு.க. தலைமையால், முதல்வரின் மனைவியையும், மகளையும் விசாரணைக்கு அழைப்பதை ஏற்றுக் கொள்ள முடியாத தர்மசங்கட நிலைமை. ÷""ஆட்சியில் பங்கு பெற்ற கூட்டணிக் கட்சியாக இருந்துகொண்டு, தேர்தலிலும் கூட்டணியாகப் போட்டியிட்டுக் கொண்டு, மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் சி.பி.ஐ. மூத்த அரசியல் குடும்பத்தை விசாரணை செய்வதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? மக்கள் எங்களை எள்ளி நகையாடுவார்கள் என்பது இருக்கட்டும், தொண்டர்கள்கூட மதிக்கமாட்டார்கள்'' என்று காங்கிரஸ் மேலிடத்திடம் விளக்கினாராம் ஒரு மூத்த தி.மு.க. மக்களவை உறுப்பினர். ÷ஏதாவது காரணத்தைக் சாக்காக வைத்து கூட்டணியிலிருந்து வெளியேறி விட்டால், மத்தியப் புலனாய்வுத் துறை முதல்வரின் குடும்பத்தினரை விசாரணைக்கு அழைத்தால், கூட்டணியிலிருந்து விலகிவிட்டதால் காங்கிரஸ் தங்களைப் பழிவாங்குகிறது என்று அனுதாபம் தேட முடியும் என்பதுதான் தி.மு.க. தலைமையின் திட்டமாம். ÷""தி.மு.க. தலைமையிலான கூட்டணியிலிருந்து காங்கிரஸ் விலகி விட்டால், அவர்கள் மீண்டும் ஆட்சியைப் பிடிக்க முடியாமல் போகலாம். ஆனால், கட்சியைக் காப்பாற்றவும், தொண்டர்களைத் தக்க வைத்துக் கொள்ளவும் ஏதாவது காரணம் தேடிக் கொண்டிருந்த தி.மு.க. தலைமைக்கு மத்திய அரசிலிருந்து விலகுவதைத் தவிர வேறு வழியில்லை. தனது பலவீனத்தை பலமாக்க முதல்வர் கருணாநிதி கடைபிடித்திருக்கும் ராஜதந்திர முடிவுதான் இது'' என்கிறார்கள் தில்லியில் முகாமிட்டிருக்கும் தமிழக காங்கிரஸ் தலைவர்கள். ÷ஆட்சிக்கான ஆதரவைத் தி.மு.க. விலக்கிக் கொள்வது தொகுதிப் பங்கீட்டுப் பிரச்னையால் அல்ல, தனது குடும்ப கெüரவத்துக்காகவும், கட்சித் தொண்டர்களைத் தக்க வைத்துக் கொள்வதற்காகவும்தான் என்கிறார்கள் விவரம் தெரிந்த அரசியல் பார்வையாளர்கள்.
கனிமொழியிடம் விரைவில் சிபிஐ விசாரணை
புது தில்லி, மார்ச் 6: 2-ஜி அலைக்கற்றை விவகாரம் தொடர்பாக திமுக எம்.பி. கனிமொழியிடம் விரைவில் விசாரணை நடத்தப்படும் என சிபிஐ வட்டாரங்கள் தெரிவித்தன. 2-ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் ரூ.1.76 லட்சம் கோடி அளவுக்கு அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது என மத்திய தலைமை கணக்குத் தணிக்கை அதிகாரியின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து இந்த வழக்கு விசாரணை உச்ச நீதிமன்றத்தின் நேரடிக் கண்காணிப்பில் நடைபெற்றுவருகிறது. தொடக்கத்தில் மந்தமாக இருந்த சிபிஐ விசாரணை, இந்த வழக்கு விசாரணையை உச்ச நீதிமன்றம் தனது நேரடிக் கண்காணிப்பில் எடுத்த பிறகு சூடுபிடித்தது. இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக இடைத் தரகர் நீரா ராடியாவிடமும், திமுக எம்.பி. கனிமொழியிடமும் விசாரணை நடத்தப்படும் என சிபிஐ வட்டாரங்கள் தெரிவித்தன. நீரா ராடியாவிடம் சிபிஐ ஏற்கெனவே விசாரணை நடத்தியுள்ளது. 2-ஜி அலைக்கற்றை உரிமம் பெற்ற ஸ்வான் நிறுவனத்தின் ஊக்குவிப்பு நிறுவனமான டிபி ரியாலிட்டி நிறுவனம், கலைஞர் தொலைக்காட்சி நிறுவனத்துக்கு உத்தரவாதமில்லாத கடனாக ரூ.214 கோடி கொடுத்தது சிபிஐ விசாரணையில் தெரியவந்தது. கலைஞர் தொலைக்காட்சியில் முதல்வர் கருணாநிதியின் குடும்பத்தினருக்கு பங்கு இருப்பதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாகவே கனிமொழியிடம் சிபிஐ விசாரணை நடத்தும் எனத் தெரிகிறது. நீரா ராடியாவுக்கு சம்மன்: ரியல் எஸ்டேட் நிறுவனமான யூனிடெக் நிறுவனம் 2007-ல் 2-ஜி அலைக்கற்றை உரிமம் பெற விண்ணப்பித்தபோது, நில பேரம் தொடர்பாக அந் நிறுவனத்துக்கு டாடா குழுமத்தின் ரியல் எஸ்டேட் நிறுவனமான டாடா ரியாலிடி & இன்பிராஸ்டிரக்சர் ரூ.1600 கோடி கொடுத்தது தொடர்பாகவும் சிபிஐ ஆய்வு செய்யத் தொடங்கியுள்ளது. இந்த பேரத்தில் வகித்த பங்கு தொடர்பாக விசாரிக்கவே நீரா ராடியாவுக்கு சிபிஐ சம்மன் அனுப்பும் எனத் தெரிகிறது. 8 நாடுகளுக்கு கடிதம்: அலைக்கற்றை உரிமம் பெற்ற தொலைத் தொடர்பு நிறுவனங்கள் அன்னிய செலாவணி மேலாண்மை சட்டத்தை மீறியுள்ளனவா என்பதை அறிந்து கொள்வதற்காக அமலாக்க இயக்குநரகத்தின் உதவியையும் சிபிஐ நாடியுள்ளது. உரிமம் பெற்ற தொலைத் தொடர்பு நிறுவனங்களின் நிதி ஆதாரம் குறித்து அறிவதற்காக சைப்ரஸ், நார்வே உள்ளிட்ட 8 நாடுகளுக்கு சிபிஐ கடிதம் அனுப்பியுள்ளது. யூனிடெக் நிறுவனத்துடன் அதன் 8 வெவ்வேறு நிறுவனங்கள் இணைந்தது குறித்தும் சிபிஐ ஆய்வு செய்து வருகிறது. தாங்கள் பெற்ற அலைக்கற்றை உரிமத்தின் பங்குகளை 3 ஆண்டுகளுக்கு வேறு நிறுவனத்துக்கு விற்கக் கூடாது என்ற நிபந்தனையை மீறாமல் இருக்கவும், அதே சமயம் அதீத லாபம் பெறவுமே இந்த நிறுவனங்கள் இணைந்தனவா என்பதே இந்த ஆய்வு. தகுதியற்ற நிறுவனங்கள் பட்டியல் தயாரிப்பு: இந்த நடவடிக்கைகளுக்கு இடையே, அலைக்கற்றை உரிமம் பெற்ற தகுதியற்ற நிறுவனங்களின் பட்டியலையும் சிபிஐ தயாரித்து வருகிறது. அந்த நிறுவனங்கள் திட்டமிட்டு மோசடி செயலில் ஈடுபட்டனவா என்பது மார்ச் 20-க்குள் முடிவு செய்யப்படும் என சிபிஐ வட்டாரங்கள் தெரிவித்தன. 2-ஜி அலைக்கற்றை உரிமம் வழங்கியதில் முறைகேடு தொடர்பாக மார்ச் 31-க்குள் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என சிபிஐக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
திமுக-காங்கிரஸ் பேச்சில் முன்னேற்றம் இல்லை: ஆஸாத்
கருத்துகள்:
கனிமொழி மேல் சி.பி. ஐ. விசாரணை நடக்காது என்று காங்கிரஸ் உறுதி மொழி கொடுத்தால் நடப்பது சுபம் என்று நினைத்து ராஜினாமா நாடகம் வாபஸ் பெறப்படும்.
by tamilselvan
TAG:
* DMK MEETING
* RASA VIDEO
* T R BALU SPEAK TO PRANAB
* KANIMOZHI PHOTOS
* ALAGIRI PHOTOS
* THANGABALU PHOTOS